தரங்கம்பாடி: வாகனங்கள் காற்றில் ஓடும் வகையில் இன்ஜினை தரங்கம்பாடி ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அடிக்கடி அதிகரித்து வருவதுடன், தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. மேலும் எரிபொருள் பயன்பாட்டால் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இதிலிருந்து மக்களை விடுவிக்க கடலூர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் புதிய தொழில் நுட்பத்துடன் வாகனங்களில் பொருத்த காற்றால் இயக்கும் இன்ஜினை வடிவமைத்துள்ளனர். நாககை மாவட்டம் தரங்கம்பாடியில் இயங்கி வரும் ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜெயராஜ் மற்றும் முரளி ஆகியோருடன் கடலூர் சி.கே. பொறியியல் கல்லூரி மூன்றாமாண்டு மாணவர்களான ரமணன், ராம்குமார், இளையராஜா, பாலசுப்பிரமணியன், யோகராஜ், பிரபாகரன் ஆசிரியர்கள் சசிகுமார், மல்லீஸ்வரன் ஆகியோர் கூட்டாக காற்றால் இயங்கும் புதிய இன்ஜினை வடிவமைத்துள்ளனர்.புதிய கண்டுபிடிப்பு குறித்து மாணவர்கள் கூறியதாவது: நாங்கள் வடிவமைத்துள்ள புதியவகை இன்ஜின் காற்றை கொண்டே இயங்கக் கூடியது. இருசக்கரம், 4 சக்கரம் வாகனங்களுக்கு இந்த இன்ஜினை பயன்படுத்தலாம். எரிபொருள் தேவை இல்லை. காற்று நிரப்பப்பட்ட உருளையில் இருந்து காற்றானது இன்ஜினின் தலைப்பகுதியின் வழியாக செலுத்தப்படும். செலுத்தப்பட்ட காற்றானது பிஸ்டன் என அழைக்கப்படும் உருளையை கீழ்நோக்கி தள்ளும். கீழே சென்ற பிஸ்டன் மீண்டும் மேலே வர, பிளே வீல் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையை பயன்படுத்தி பிஸ்டனை மீண்டும் மேலே கொண்டு வரவும், மறுபடியும் காற்று உள்ளே செல்லவும் ஒரு சிறப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். இந்த அமைப்பானது தேவையான நேரத்தில் காற்றை சரியான இடத்திற்கு கொடுக்கும். இந்த எளிய முறை மூலம் தொடர் நிகழ்வாக இன்ஜின் இயங்க ஆரம்பிக்கும். இந்த இயக்கத்தை பயன்படுத்தி நாங்கள் வாகனங்களை இயக்கியுள்ளோம். வெறும் 600 ரூபாய் செலவில் எங்கள் கருவியை எந்தவகை இன்ஜினிலும் இணைத்துக் கொள்ளலாம். எரிபொருள் இல்லாமல் மிக சாதாரணமாக இயங்க வைக்கலாம். எரிபொருளாக வெறும் சுற்றுப்புற காற்றையே பயன் படுத்துவதால் 100 சதவீதம் மாசும் ஏற்படாது. மேலும் இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பரிசீலனைக்கு எடுத்து கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து பொருளாதார உதவிகள் பெற்று தந்தால் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். இவ்வாறு மாணவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment