Wednesday, 26 August 2015

இ மெயில் நாயகன் - சிவ அய்யாதுரை கட்டுரை,பேட்டி,ஜோதிடம்,ஜாதகம்,ஆராய்ச்சி தொகுப்புகள்

இணைய தளங்களில் காணப்படும் செய்திகளுடன் சிவ அய்யாதுரை அவர்களது ஜாதகம் எந்தளவுக்கு ஒத்து போகிறது என்பதை கார்திக் ஜோதிடம் பிளாக்கில் கீழே குறிப்பிட்டுள்ளதைக் கொண்டு அறியலாம்.

இமெயில் நாயகன் அய்யாதுரை ஜாதகம் - சிவ அய்யாதுரை ஜாதகம் 

12ல் ஆட்சி பெற்ற குரு 4ம் இடம் பார்கின்ற காரணத்தாலும் 4க்குரிய வர் சந்திரனே ஆனதாலும் அந்த சந்திரனுக்கு பலகிரகங்களின் சம்பந்தம்  இருந்ததாலும் இவருக்கு மிகவும் அறிவு பெற்ற தாய் அமைந்தார்கள். 9மிடத்திற்கும் இதுபோலவே பல கிரகங்களின் சம்பந்தம் உள்ளது. இதனால் தந்தையாலும் மிகவும் நன்மைகளை பெற்று இருப்பார்.  3மிடத்திற்கு ராகு சந்திரன் அந்த வீட்டின் அதிபதி புதன் இந்த கூட்டணி அவரை ஒரு ஆராய்சியாளராக ஆய்வாளராக ஆக்கியது. அந்த 3ம் இடத்துக்கு லக்னாதிபதி செவ்வாயின் பார்வை இருந்த காரணத்தினால் பல காரியங்களையும் துணிச்சலாக செய்யும் ஆற்றலையும் பெற்று இருப்பார். அறிவுக்குரிய 5க்குரிய சூரியனே 8ல் இருந்து 2ஐ பார்கின்ற காரணத்தினால் இவரது பேச்சால் அரசு அதிகாரிகளின் கண்டனத்துக்கும் அவர்களது கண்டிப்பிற்கும் ஆளாகியிருப்பார். இதனால்  அரசு அதிகாரிகளால் அவமானத்தை சந்திதிருப்பார்.  10ல் ஆட்சி பெற்ற சனி இருப்பதனாலும் மிகவும் பெயரும் புகழும் பெறும் யோகம் அமைந்தது. அந்த சனியின் பார்வை பெற்ற பலம் வாய்ந்த குருவே 9ம் இடத்துக்கும் அதிபதியானதாலும்  அந்த 9மிடத்துக்கு பல கிரகங்களின் சம்பந்தம் இருக்கின்ற காரணத்தாலும் அவர் மக்களிடையே நீங்காத புகழை பெறும் யோகம் அமைகிறது.

9ம் இடமே மக்கள் ஆதரவை பெறும் இடம்
1) குரு - இதுவே அந்த வீட்டின் அதிபதியாகும். ஆட்சிபெற்று பலம் வாய்ந்ததாக இருக்கிறது.
2) சனி - ஆட்சிபெற்ற பலம் வாய்ந்த சனி 9ம் வீட்டின் அதிபதியை பார்வை செய்கிறது
3) செவ்வாய்- இவரே லக்னாதிபதியாகியும் 9மிடத்திலே தங்கியிருக்கிறது
4) புதன் - அறிக்கு காரணகர்தாவாகியா புதன் 9ல் அமர்ந்திருக்கிறது
5) சுக்ரன் - இந்த ஜாதகரின்  இனிமையான அருமையான மற்றவர்களை கவர்ந்திழுக்கும் பேச்சுக்கு காரணமான இவரும் 9ல் அமர்ந்து இருக்கிறார்.
6) கேது ஆச்சரியபடுத்தும் விஷயங்களை அமர்களமாக செய்திட வழிகாட்டும் கேது  9ல் அமர்ந்து மக்கள் பயன்படுத்தும் இமெயில் கண்டுபிடிக்க காரணகர்தாவாகிறார்.
7. சூரியன் அறிவு ஸ்தானத்துக்கு அதிபதியாகி 9மிடத்தின் அதிபதி குருவின் பார்வை பெற்றதால் மக்கள் பயன்பெறதக்க வகையில் இவருடைய அறிவு உதவிசெய்கிறது.
8.சந்திரன் மனசுக்காரன் சந்திரனும் 9ம் இடத்தை பார்வை செய்து அந்த இடத்திற்கு பலம் சேர்க்கிறது
9. ராகு மர்ம, ரகசிய,ஆராய்சிக்கு காரணகர்த்தாவாகிய ராகுவும் 9மிடத்தை
பாரக்கிறது.
இப்படி நவக்கிரகங்களும்/நவக்கிரஹங்களும் 9மிடத்துக்கு வலு சேர்கின்ற காரணத்தால் இவரகள் மக்களுக்கு பயன்தரதக்க வேலைகளில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவார்கள்.
மேலும் இது போன்ற பல விஷயங்களை காண கீழே உள்ள லிங்கிற்கு செல்லவும். http://karthikjothidam.blogspot.in/

இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது. இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் 'இமெயில்' தான் என்று ஆகிவிட்டது.

ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான 'இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை. மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது 'இமெயில்' பயணத்தை inventorofemail.comதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்தியாவில் அவமதிப்புஇதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார்.

ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.
 
by செந்தில் http://www.thagaval.net/t1666-14

'இ மெயிலைக் கண்டுபிடித்த  தமிழர்! - தினமனி

ஒரு வீடியோ படமா இ-மெயிலில் அனுப்பி வை. புகைப்படங்களா? உடனே அனுப்பு இ-மெயிலில். எந்தக் கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா? இ-மெயிலில் அனுப்பச் சொல்லுங்கள்.

 மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே  இ - மெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக்கிடையிலான  தகவல் பரிமாற்றமாக இருக்கட்டும் இப்போது இ - மெயிலே சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது.

 இந்த இ-மெயிலைக் கண்டுபிடித்தவர் யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள். நீங்கள் நினைத்தது உண்மைதான். அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர். அதுவும் தனது 14 வயதில்

இ - மெயிலைக் கண்டுபிடித்துச் சாதனை செய்த சிவா அய்யாதுரை. இப்போது அவருக்கு வயது 48.

 அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க்  என்ற ஊரைச் சேர்ந்தவர். சென்னையிலிருந்தே அவரிடம் பேசினோம்:

 ""என்னுடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. எனது தாத்தா அரசுத்துறையில் சிவில் என்ஜினியர். அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர். எனது சிறிய வயதிலேயே நாங்கள் மும்பைக்குச் சென்றுவிட்டோம்.

 நான் நன்றாகப் படிப்பதைத் தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை மேலும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 1970 இல் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனுக்குப் போனோம். அம்மா கணிதவியல் நிபுணராகவும், ஸிஸ்டம் அனலிஸ்ட்டாகவும்  இருந்தார்.

 எனக்குச் சிறுவயதிலேயே படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம். எனது சிறுவயதில் நான் இருவேறு உலகங்களில் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் இந்தியனாகவும், வெளியே அமெரிக்கனாகவும் வாழ்ந்தேன்.

பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 40 பேரைத் தேர்ந்து எடுத்து அந்தப் பல்கலைக் கழகத்தில் சொல்லித் தந்தார்கள். அதில் நானும் ஒருவன். கம்ப்யூட்டர் புரோகிராம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாத அந்த நாளில் நான் அங்கே கற்றுக் கொண்டது பெரிய விஷயமாக இருந்தது.

 இந்தப் பின்னணியில்தான், 1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள "யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி'யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தேன். பின்னாளில் உலகம் முழுவதும் பயன்படுத்தப் போகும் ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை நான் அங்கே வடிவமைப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

 அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடியுமா? என்று என்னைக் கேட்டார்கள். அப்போது எனக்கு 14 வயது.

 தொடர்ந்து பலநாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினேன். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தேன்.

  நான் இந்த E MAIL -ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.

 நான்தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவன். FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி அதை உருவாக்கினேன். இது DATABASE, LAN(LOCAL AREA NETWORK) உடன் தொடர்புடையதாக இருந்தது. இ மெயில் என்பது டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. அது ஒரு ஸிஸ்டம். இ - மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY  எல்லாம் நான் உருவாக்கியவை.

 அதற்குப் பிறகு "மசாசூஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றேன். மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். இ - மெயிலைக் கண்டுபிடித்தற்காக, அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் நானும் ஒருவன்.

எனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை வாங்க 1982 இல் அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத்தை அணுகினேன். அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி என்று ஆலோசனை கூறக் கூட அப்போது யாரும் இல்லை. எனக்கு அப்போது 19 வயது. 1982 ஆகஸ்ட் 30 இல்  இ - மெயிலைக் கண்டுபிடித்ததற்காக எனக்கு காப்புரிமை கிடைத்தது.

  ஆனால் பலர்  தாங்கள்தாம் இ - மெயில் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் நான் இ - மெயில் கண்டுபிடிக்க செய்த முயற்சிகளைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உலக அளவில் புகழ்பெற்ற  மொழியியல், தத்துவத்துறைப் பேராசிரியர் நோம் சாவ்ஸ்கி. நான்தான் இ மெயில் கண்டுபிடித்தேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். நான் கண்டுபிடிப்பதற்கு முன்பு இ மெயில் என்ற சொல் உலகத்தில் எந்த அகராதியிலும் இல்லை.

  இ - மெயிலை நான் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறுவதற்குக் காரணம்,  1. நான் ஓர் இந்தியன்,

2. நான் புலம் பெயர்ந்தவன், 3. தமிழன், 4. கறுப்புநிறத்தவன். 5.நெவார்க்
என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவன். இவற்றைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை. அது போகட்டும்.

  அதற்குப் பின்பு  நான்தான் இ - மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை அங்கீகரித்தது, உலக அளவில் புகழ்பெற்ற "சுமித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்'.

  இ - மெயிலை நான் கண்டுபிடிக்கும்போது பயன்படுத்திய நாடாக்கள், பதிவுகள், காப்புரிமை மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளில் உள்ள Code  கள் எல்லாவற்றையும் அங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை என்னை Dr.Email என்றே குறிப்பிடுகிறது.

1993 இல் அப்போதைய அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது, வெள்ளை மாளிகைக்கு  ஒரு நாளைக்கு 5000 - 6000 இ-மெயில்கள் வந்தன. அந்தஇ - மெயில்களைத் திறந்து படித்துப் பார்த்து, அவற்றுப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதற்குச் சொல்லவோ, இ - மெயில்களுக்குப் பதில் அனுப்பவோ இருநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்பட்டனர். அதனால் பில் கிளிண்டன் ஒரு போட்டியை அறிவித்தார். இந்த இ - மெயில்களைக் கையாள்வதை தானியங்கி மயமாக்கு பவர்களுக்குப் பரிசு என்று அறிவித்தார். அதாவது வெள்ளை மாளிக்கைக்கு வரும் இ - மெயில்களைப்  படித்துப் பார்த்து, அந்த இ - மெயில் எதைப் பற்றியது? என்ன சொல்கிறது? குறை சொல்கிறதா? பாராட்டுகிறதா? என்ன வேண்டும் என்று அது கேட்கிறது? எதைப் பற்றிப் புகார் சொல்கிறது? இது எந்தவகையான இ - மெயில்? என்று ஒரு மனிதன் எப்படிப் படித்துப் பார்த்து முடிவெடுத்துச் செயல்படுவானோ, அதுபோல ஒரு கம்ப்யூட்டர் செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ற மென்பொருளை உருவாக்கித் தர வேண்டும். அதற்குப் பரிசு என்று அறிவித்தார்.  அந்தப் போட்டியில் அமெரிக்காவில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் கலந்து கொண்ட தனிநபர் நான் மட்டுமே. பில் கிளிண்டன் கேட்டுக் கொண்டபடி நான் ECHO MAIL என்ற சிஸ்டத்தை  உருவாக்கிக் கொடுத்தேன். எனக்குப் பரிசு கிடைத்தது. நான் உருவாக்கிய இந்த ECHO MAIL என்ற சிஸ்டம் உலகிலேயே முதன்முதல் உருவாக்கப்பட்ட இ மெயில் மேனேஜ்மென்ட் சிஸ்டமாகும். இது எனது குறிப்பிடத்தக்க இன்னொரு கண்டுபிடிப்பு.

 பின்பு 1994 இல் ECHO MAIL.Inc என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அந்த சிஸ்டத்தை பல அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவி வருகிறேன்.

எனக்கு கம்ப்யூட்டர்துறையில் மட்டுமல்லாமல், மருத்துவத்திலும் ஆர்வம் உண்டு.

எனது சிறிய வயதில் எனது அப்பாவின் சொந்த ஊரான இராஜபாளையத்துக்குப் பக்கத்தில் உள்ள முகவூருக்குப் போயிருக்கிறேன். எனது அப்பாவின் அம்மா சின்னத்தாய், ஒரு சித்த மருத்துவர். அவர் அங்குள்ள மக்களுக்கு பலவிதமான நோய்களுக்கு மூலிகைகளிலான மருந்துகளைக்  கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அது இயல்பாகவே எனக்கு நமது பாரம்பரிய மருத்துவத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவம் எப்படி அறிவியல்பூர்வமாகச் செயல்படுகிறது என்ற அடிப்படையில் ஆராய்ச்சி  செய்து வருகிறேன். இன்றைய உலக மருத்துவத்துக்கு நிகரான - அதைவிட மேம்பட்ட - பல மருத்துவ வழிமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. வெளி உலகுக்குத் தெரியாமல் ஓலைச் சுவடிகளில் மக்கி மறைந்து போனவை நிறைய.

  நான் "மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் சிஸ்டம்ஸ் டெக்னாலஜி, சிஸ்டம் விசுவலைசேஷன் வகுப்புகளை எடுக்கும் பேராசியராகவும் இருக்கிறேன்.

  ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே... 2008 இல் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்து "அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்' (CSIR) என்ற அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வந்தேன்.  மூன்று மாதங்கள் இந்தியாவில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயார் செய்தேன். இங்கே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய சூழ்நிலை நிலவவில்லை என்பதை அறிந்தேன். இங்குள்ள விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறனுடையவர்கள் என்றாலும் அதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் எந்த உருப்படியான கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இருப்பதற்கு இந்த அமைப்பின் மேலிருந்து அமுக்குபவர்களே காரணம் என்று சொன்னேன். இது இந்தியாவில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டேன்'' என்கிறார் சிவா அய்யாதுரை.

  அவருடைய கண்டுபிடிப்பான இ - மெயிலுக்குக் காப்புரிமை பெற்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, "இன்னோவேஷன் கார்ப்ஸ்' என்ற நிறுவத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதன் மூலம் இவர் வளர்ந்த நெவார்க் நகரத்தில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினால், அவர்களுக்கு 1 லட்சம் டாலர் பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதை அமெரிக்காவின் பிற ஊர்களுக்கு மட்டுமல்ல, சென்னை வரை இதை விரிவுபடுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம்? என்று கேட்டோம்.

இமெயிலின் தந்தை' சிவா அய்யாதுரை

  ""இந்த நெவார்க் நகரம் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. அதனால் அதற்குத் திருப்பி எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு அமைந்ததைப் போன்ற குடும்பம், எனக்கு அமைந்ததைப் போன்ற சூழல் எல்லாருக்கும் அமைந்தால், எல்லாரும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். உருவாக்குவார்கள்.

இந்தியாவில் 25 வயதுக்குட்பட்டோர் பாதிக்கும் மேல் - 50 கோடிக்கும் மேல் உள்ளனர். வெளிநாடுகளின் அவுட்சோர்சிங் மூலமாகக் கிடைக்கும் வேலைவாய்ப்பெல்லாம் வருங்காலத்தில் இந்த இளம் வயதினருக்குப் போதவே போதாது. புதிய புதிய கண்டுபிடிப்புகளின் மூலமாகத்தான் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். கண்டுபிடிப்புகளை பெரிய பெரிய பல்கலைக் கழகங்களின் மூலமாக, தொழில்நுட்பக் கல்லூரிகள் மூலமாகத்தான் உருவாக்க முடியும் என்ற மாயை இந்தியாவில் உள்ளது. உண்மையில் புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், கண்டுபிடிப்பவர்களுக்கு உரிய வசதிகளும் செய்து தரப்பட்டாலேயே போதும். அதற்கு ஊக்கமூட்டும்விதமாகவே இந்த பரிசளிப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன்'' என்ற அவரிடம், அவருடைய குடும்பத்தினரைப் பற்றிக் கேட்டோம்.

""அம்மா சமீபத்தில் இறந்துவிட்டார்கள். அம்மாவால்தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்தேன் . அம்மா இல்லாதது எனக்குப் பெரிய இழப்பு. மனவேதனை. அப்பாவுக்கு 80 வயதாகிவிட்டது. சகோதரி உமா தனபாலன் டாக்டராக இருக்கிறார்'' என்றார்.

 சிவா அய்யாதுரையின் சமீபத்திய கண்டுபிடிப்பு முயற்சி: கணையத்தில் வரும் புற்றுநோய்க்கு மருந்து.

இ-மெயில் தமிழன் சிவா அய்யாதுரை பேட்டி ஆனந்த விகடன்

மனித குலத்தின் ஒரே தொடர்பு ஊடகமாக பரிணமித்துள்ள இ-மெயிலை கண்டுபிடித்தவர் யார்? அவர் ஒரு தமிழன். பெயர் சிவா அய்யாதுரை. ராஜபாளையத்துக்காரர். வசிப்பது அமெரிக்காவில்.

டைம் பத்திரிகை இவரை ‘டாக்டர் இ-மெயில்’ என்று அழைக்கிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் என அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் ‘இ-மெயிலை கண்டுபித்தவர்’ என இவரை கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும், பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, ‘டாக்டர் சிவாதான் இமெயிலை கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடம் எல்லாம் பேசுகிறார். உலகின் மிக முக்கியமானதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (smithsonian museum), “மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இ-மெயிலையும் மதிப்பிட வேண்டும்” என்று வர்ணிக்கிறது.

Shiva-Ayyadurai-Photo-Shot

அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி. (Massachusetts Institute of Technology)  பல்கலைக்கழகத்தில் Systems Visualization   மற்றும் Comparative Media Studies  ஆகிய இரு துறைகளில் பேராசியராக இருக்கும் சிவா அய்யாதுரை, அதே பல்கலைக்கழகத்தில் நான்கு பட்டங்களும் ஒரு பி.ஹெச்.டி. பட்டமும் பெற்றவர். நோம் சாம்ஸ்கி தலைமையில், இந்தியாவின் சாதிய அடுக்குநிலை தொடர்பாக ஆய்வு செய்தவர். நஷ்டத்தில் இயங்கி மூட வேண்டிய நிலையில் இருந்த அமெரிக்க தபால் துறையை லாபகரமாக மாற்றிக்காட்டியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் ஏழு நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருபவர். (அதில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ‘வெள்ளை மாளிகை’யும் உண்டு).

ஓர் அதிகாலை நேரத்தில் சிவா அய்யாதுரையுடன் நடத்திய நீண்ட ‘ஸ்கைப்’ உரையாடலில் இருந்து…

சொல்லுங்கள், நீங்கள் யார்? இத்தனை நாளும் எங்கிருந்தீர்கள்?

“இங்குதான் இருந்தேன். எப்போதும் போல என் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்! என் அப்பா அய்யாதுரைக்கு சொந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் என்ற கிராமம். அம்மா மீனாட்சிக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. அப்பா, அம்மா இருவரும் அந்தக் காலத்திலேயே நன்றாக படித்தவர்கள். அம்மா, அப்போதே எம்.எஸ்.சி. கணிதம் படித்து மாநில அளவில் பதக்கம் வென்றவர். எனக்கு விவரம் தெரிவதற்கு முன்பே குடும்பம் மும்பைக்கு இடம்பெயர்ந்து விட்டது. அங்கு செம்பூர் என்ற இடத்தில் குடியிருந்தோம். அப்பா, யூனிலீவர் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தார். அம்மா, டான்பாஸ்கோ பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றினார். 5, 6 வயதிலேயே எனக்கு படிப்பின் மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. என்னை மேற்கொண்டும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக எங்கள் குடும்பம் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தது. சரியாக நீங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் இதே டிசம்பர் 2-ம் தேதி, எனது ஏழாவது பிறந்தநாள் அன்று நாங்கள் மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு பறந்தோம்.

நியூஜெர்ஸியில் வீடு. நூவர்க் (Newark) என்ற சிறிய பகுதியில் இருந்த லிவிங்ஸ்டன் பள்ளியில் படித்தேன். 1978-ம் ஆண்டு, எனக்கு 14 வயது இருக்கும்போது நியூயார்க் பல்கலைக்கழகம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 40 மாணவர்களை தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளை கற்றுக்கொடுத்தது. இந்தியாவில் கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதை போல… அது ஒரு சம்மர் கிளாஸ். அதில் ­FORTRAN IV என்ற புரோகிராமிங் மொழியை கற்றுக்கொண்டேன். அந்த பயிற்சியில் பங்கெடுத்த ஒரே இந்திய மாணவன் நான்தான். ஆனாலும் எனக்கு பள்ளிப்படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வந்தது.

நான் பள்ளியை விட்டு நிற்கப் போவதாக அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா, ‘யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் டென்டிஸ்ரி’யில் (University of Medicine and Dentistry of New Jersey) டேட்டா சிஸ்டம் அனலிஸ்ட்-ஆக பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் தன்னுடன் பணிபுரிந்த, லெஸ் மைக்கேல்சன் (Les Michelson) என்ற பேராசிரியரிடம் என்னை அழைத்துச் சென்றார். மைக்கேல்சன், அப்போது அந்த மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளை, கம்ப்யூட்டர் வழியாக ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் என்னை தன் ஆராய்ச்சி உதவியாளர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டார். நான் பள்ளிக்கூடம் சென்றதுபோக மீதமிருந்த நேரத்தை எல்லாம் மைக்கேல்சனின் ஆராய்ச்சிக் கூடத்திலேயே செலவழித்தேன். இரவு, பகலாக அங்கேயே கிடந்தேன். சவால் நிறைந்த அந்த பணி என் மனதுக்குப் பிடித்திருந்தது.

அப்போது அந்த மருத்துவமனையில் மூன்று கட்டடத் தொகுதிகள் இருந்தன. ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக ‘மெமோரண்டம்’ எழுதுவார்கள். நோயாளி பற்றிய விவரம், மருத்துவர் பற்றிய விவரம், to, from, subject எல்லாம் எழுதப்பட்ட அந்த மெமோரண்டத்தை அங்கிருக்கும் தபால்பெட்டி மூலம் பரிமாறிக்கொள்வார்கள். இதை அப்படியே எலெக்ட்ரானிக் மயப்படுத்த வேண்டும். அந்த மெமோரண்டத்தை மருத்துவமனையில் உள்ள எந்த ஒரு கம்ப்யூட்டரில் இருந்தும், மற்றொரு கம்ப்யூட்டருக்கு எலெக்ட்ரானிக் வடிவத்தில் அனுப்ப முடிய வேண்டும். இதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. இந்த ஆராய்ச்சியில் நான் உருவாக்கியதுதான் இ-மெயில் சிஸ்டம். ­

FORTRAN IV மொழியில் 50 ஆயிரம் வரிகள் கொண்ட அந்த புரோகிராமை எழுதியபோது எனக்கு வயது 14. அது 1978-ம் ஆண்டு. அதற்கு email  என்று பெயரிட்டேன். electro mail என்பதன் சுருக்கம் அது. FORTRAN  மொழியில் ஒரு புரோகிராமில் அதிகப்பட்சம் 5 எழுத்துருக்கள்தான் பயன்படுத்த முடியும் என்பதாலும், email  என்ற சொல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததாலும் அந்த பெயரை வைத்தேன். அகராதியில் அதற்கு முன்பு email   என்ற வார்த்தையே கிடையாது.

1981-ம் ஆண்டு எனது கண்டுபிடிப்புக்காக, ‘வெஸ்டிங்ஹவுஸ் சயின்ஸ் டேலன்ட்’ (Westinghouse Science Talent) விருதுக்காக விண்ணப்பித்தபோது, ‘தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடித்த சமயத்தில் அது உலகத்தை ஆளப்போகிறது என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் இந்தக் கண்டுபிடிப்பும் அப்படி ஆகலாம்’ என்று குறிப்பு எழுதினேன். இன்று அதுதான் நடந்திருக்கிறது!”

அதன்பிறகு நீங்கள்தான் இ-மெயிலை கண்டுபிடித்தீர்கள் என்று ஏன் உரிமை கோரவில்லை?

“அப்படி யார் சொன்னது? இ-மெயிலுக்கான ‘காப்பி ரைட்ஸ்’ இன்றும் என்னிடம்தான் இருக்கிறது. நான் 1981, செப்டம்பர் மாதம் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்துக்கு வந்தேன். 1982 ஆகஸ்ட் 30-ம் தேதி இ-மெயிலுக்கான முதல் காப்புரிமையை அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றேன். அப்போது இண்டர்நெட் என்பது வரவில்லை. ஆகவே இ-மெயில் என்பது நிறுவனங்கள் நிர்வாக ரீதியாக பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாக இருந்தது. 1989-ல்தான் இண்டர்நெட் வழியே இ-மெயில் அனுப்பும் சோதனை முயற்சிகள் தொடங்கின. 96-ம் ஆண்டு ஹாட்மெயில் மிகப் பிரபலமாக காரணம், அப்போது உலகம் முழுவதும் இண்டர்நெட் அதிவேகமாக பரவிக்கொண்டிருந்தது. அதன்பிறகு 97-ல் யாஹூ வந்தது. 99-ல் செல்போன் வழியே இ-மெயில் அனுப்பும் வசதியை பிளாக்பெர்ரி துவங்கியது. நான்கு வருட ‘பீட்டா’ பரிசோதனைக்குப் பிறகு 2007-ல் ஜி-மெயில் வந்தது!”

ஆனால், டேவிட் கிராக்கர் (David Crocker), ராய் டாமில்சன் (Ray Tomlinson) ஆகியோரின் பெயர்களும் இ-மெயில் கண்டுபிடித்தவர்கள் பற்றிய ஆய்வுகளில் பேசப்படுகின்றன…

“அது பழையகாலம். நான்தான் இ-மெயிலை கண்டுபித்தேன் என்பதை ஸ்மித்சோனியம் ஆவணக் காப்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு இந்த சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 1978-ம் ஆண்டு உலகின் முதல் இ-மெயிலை எனது வழிகாட்டியான பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனுக்கு அனுப்பினேன். அது ஒரு டெஸ்ட் மெயில். அதன் ஒரிஜினல் புரோகிராமிங் கோடு, இப்போது ஸ்மித்சோனியம் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. பேராசிரியர் நோம் சாம்ஸ்கி என் ஆய்வுகளின் நேரடி சாட்சியாக இருக்கிறார். அவர் எனது கண்டுபிடிப்பை பற்றி பல இடங்களில், பேசியும் எழுதியும் வருகிறார். புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகை, தனது தொழில்நுட்பப் பிரிவின் பதிப்பில் எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்து என்னுடைய நீண்ட பேட்டி ஒன்றையும் வெளியிட்டது.

டேவிட் கிராக்கர் கண்டுபிடித்தது ‘டெக்ஸ்ட் மெசேஜ்’ (text message) அனுப்பும் தொழில்நுட்பத்தைதான். புரியும்படி சொல்வதானால், இப்போது ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா… அதைபோல அவர் வெறுமனே டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக்கொள்வதை கண்டறிந்தார். அதை இ-மெயில் என்று சொல்ல முடியாது. அப்படியானால் நாம் தந்தி அனுப்புவதைதான் இ-மெயில் என்று அழைக்க வேண்டியிருக்கும். கார் ஓடுவதற்கான நான்கு சக்கரங்களை கண்டுபிடித்துவிட்டு ‘நான் கார் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று சொல்வதை போலதான் இதுவும். மாறாக, இ-மெயில் என்பது ஒரு முழுமையான சிஸ்டம். இன்று நாம் பயன்படுத்தும் Inbox, Outbox, Drafts, To, From, Date, Subject:, Body, Cc, Bcc, Attachments, Folders, Compose, Forward, Reply, Address Book, Groups, Return Receipt, Sorting   உள்ளிட்ட 86 வகையான இ-மெயில் புரோகிராமிங்கை எழுதி, வடிவமைத்தது நான்தான். இதுதான் முழுமையான இ-மெயில் சிஸ்டம். ராய் டாமில்சனை பொருத்தவரை அவர் இ-மெயிலில் இன்று பயன்படுத்தும் @  குறியீட்டை கண்டுபிடித்தார். அதற்கு மேல் அவரது பங்களிப்பு இதில் எதுவும் இல்லை!”

இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள்?

“1993-ம் ஆண்டு நான் பி.ஹெச்.டி. ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தார். அப்போது வெள்ளை மாளிகைக்கு நாள் ஒன்றுக்கு 5,000 இ-மெயில்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றை நிர்வகிக்க நூற்றுக்கணக்கானவர்கள் வேலைக்கு இருந்தாலும், அது நாளுக்கு நாள் சிக்கலானதாக மாறிக்கொண்டிருந்தது. ஆகவே, அந்த மெயில்களை வகை வாரியாக பகுத்து பிரிக்கும் தானியங்கி தொழில்நுட்பத்தை கண்டறிவதற்கான போட்டி ஒன்றை அறிவித்தது வெள்ளை மாளிகை. பல்வேறு நிறுவனங்களும், தனிநபர்களுமாக 147 பேர் அதில் கலந்துகொண்டனர். இறுதியில் நான் கண்டறிந்த தொழில்நுட்பம் வெற்றிபெற்றது. அதற்கு நான் ‘எக்கோமெயில்’ (EchoMail) என்று பெயரிட்டேன். இப்போதும் வெள்ளை மாளிகையில் இந்த தொழில்நுட்பம்தான் நடைமுறையில் இருக்கிறது.

பிறகு இந்த ‘எக்கோமெயிலை’ ஒரு நிறுவனமாக தொடங்கினேன். இன்று உலகின் மிக முக்கியமான நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்கள். இந்த நிறுவனத்தின் மதிப்பு 200 மில்லியன் டாலர். இதுபோக, வேறு மூன்று நிறுவனங்களையும் நடத்துகிறேன். கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் நஷ்டத்தில் இயங்கிய அமெரிக்க தபால் துறையை எனது புதிய இ-மெயிலிங் சிஸ்டம் மூலம் லாபகரமாக மாற்றியபோது, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பில் இருந்து தப்பினார்கள். அமெரிக்க ஊடகங்கள் என்னைப்பற்றி பெரிதாக எழுதினார்கள். ஆனால் எனக்கு இந்தியாவில் பணிபுரியவே விருப்பம். ஆனால் அங்கு எனக்கு ஒரு கசப்பான அனுபவம் இருக்கிறது.”

என்ன நடந்தது இந்தியாவில்? நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாக இணையப் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது…

“ஆம், உண்மைதான். 2007-ம் ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான CSIR-Council of Scientific and Industrial Research துறையில் என்னை கூடுதல் செயலாளராக நியமித்தார் மன்மோகன்சிங். மூன்று ஆண்டுகள் அங்கு இருந்தேன். அந்த சி.எஸ்.ஐ.ஆர். நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. கடந்த 60 ஆண்டுகளில் அதில் உள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்கும் லஞ்சம், ஊழல். அறிவியல் கண்டுபிடிப்புக்கான சூழல் கொஞ்சமும் இல்லை. இதைப்பற்றி ‘கண்டுபிடிப்புகளுக்கு சுதந்திரம் வேண்டும்’ (Innovation demands freedom) என்ற தலைப்பில் 47 பக்கத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதை உலகின் முக்கியமான 4 ஆயிரம் விஞ்ஞானிகளுக்கு மெயில் அனுப்பினேன். உலக அளவில் அது விவாதம் ஆனது.

உடனே இந்தியாவின் சட்டத்தை நான் மீறிவிட்டதாகச் சொல்லி திடீரென ஒருநாள் என் வீடு முடக்கப்பட்டது. என்னை வெளியேற்றினார்கள். நான் நேபாளம், கத்தார் வழியே அமெரிக்கா வந்தேன். ‘சிவா அய்யாதுரையை வெளியேற்றியது இந்தியா செய்த பெரிய தவறு’ என்று பல விஞ்ஞானிகள் எழுதினார்கள். அதைப்பற்றி இந்தியா கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இப்போதும் அங்கு சூழல் மாறிவிடவில்லை. அங்கிருக்கும் நேர்மையற்ற அரசியல் சூழலில் அறிவியல் ஒருபோதும் வளராது”

இ-மெயிலை கண்டுபிடித்தது நீங்கள்தான் என்பதை அவ்வளவு சுலபத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?

“ஏனெனில் நான் கறுப்பு நிறத் தோல் உடையவன். புலம்பெயர்ந்து வந்த இந்தியன். சிறுபான்மை தமிழன். ‘நூவர்க்’ என்னும் சிறிய ஊரில் வசித்தவன். முக்கியமாக 14 வயது சிறுவன். இவற்றை தவிர வேறு என்ன காரணத்தை சொல்ல முடியும்? 50 ஆயிரம் வரிகளை கொண்ட ஒரிஜினல் புரோகிராமிங் கோட், ஒரு வெள்ளைத்தோல் உடையவரிடம் இருந்தால் இந்த சர்ச்சைகளுக்கு வாய்ப்பே இல்லை.

அறிவியல் கண்டுபிடிப்புகளை ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், எம்.ஐ.டி. போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களிலும்தான் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் நான் எம்.ஐ.டி-யில் இருந்தபோது கண்டுபித்த ‘எக்கோமெயிலை’ கொண்டாடும் இவர்கள், நியூஜெர்ஸி மருத்துவமனையில் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தபோது கண்டுபிடித்த இ-மெயிலை புறக்கணிக்கிறார்கள். இந்தியாவில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் பாகுபாடு இருப்பதை போல, அமெரிக்காவில் தோலின் நிறத்திலும், சிறுபான்மை-பெரும்பான்மை என்ற அளவிலும் பாகுபாடு இருக்கிறது. தெளிவாக எழுதிக்கொள்ளுங்கள், தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்த கறுப்பு நிறத் தோல் உடைய 14 வயது தமிழ் சிறுவன் இ-மெயிலை கண்டுபிடித்தான்.

இன்னொரு முக்கியமான கோணத்திலும் இதை நீங்கள் பார்க்க வேண்டும். நான் அடிக்கடி பயன்படுத்தும் ‘மோட்டோ’ வாக்கியம், ‘கண்டுபிடிப்பு என்பதை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் செய்ய முடியும்’ (Innovation Any Time, Any Place by Anybody). அறிவும், அறிவியலும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அறிவியல் கண்டுபிடிப்புகளை வெறுமனே பணம் ஈட்டும் சந்தையாக பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்னை தனிமைப்படுத்த விரும்புகின்றன. ஆனால் நான் இப்போதும் சொல்கிறேன், என்னிடம் பேட்டி எடுக்கும் நீங்களும், இதை படிக்கப்போகும் தமிழ் வாசகர்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். அதற்கான சூழலை உருவாக்கித் தர வேண்டும். வரப்போகும் காலம் மிக அபாயகரமானது. வேலை இல்லாத் திண்டாட்டம் மிக மோசமாக இருக்கும். மில்லியன் கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது அறிவியலால் மட்டும்தான் சாத்தியமாகும்!”

உங்கள் பேச்சை வைத்து கேட்கிறேன்… நீங்கள் சயிண்டிஸ்டா, கம்யூனிஸ்டா?

“நான் சயின்டிஸ்ட் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்டும் கூட. எம்.ஐ.டி.யில் படிக்கும்போது மாணவர் சங்கத்தில் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். தென் ஆப்பிரிக்காவில் நடந்த‌ நிறவெறி நடவடிக்கைகளைக் கண்டித்து அந்த நாட்டு கொடியை எரித்தேன். பல்கலைக்கழகத்தின் உணவு உபசரிப்புப் பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதை கண்டித்து போராடி வெற்றி பெற்றோம். இலங்கையில் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அப்போது அதிபராக இருந்த பிரேமதாசா அமெரிக்கா வந்தார். அவரை வெளியேறச் சொல்லி போராடினோம். ‘த ஸ்டூடண்ட்’ என்ற பெயரில் நான்கு ஆண்டுகள் பத்திரிகை நடத்தினேன். கல்லூரி வளாகத்தில் நானும், என் சகாக்களும் வலிமை வாய்ந்த சிறுபான்மை சக்திகளாக இருந்தோம். பி.ஹெச்.டி. செய்துகொண்டிருந்தபோது, ஈராக் நாட்டுக்குள் படைகளை அனுப்பிய அமெரிக்க அரசுக்கு எதிராக தன்னந்தனியாக போராடினேன். அதனால் நான் அடிப்படையில் கம்யூனிஸ்ட். பிறகுதான் சயின்டிஸ்ட்.

இன்று தொழில்நுட்பத்தையும், அறிவியல் வளர்ச்சியையும் பெரும் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற இணைய நிறுவனங்களும், செல்போன் கம்பெனிகளும் மக்களை அன்றாடம் கண்காணிக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது மக்களுக்கு எதிராக கை கோத்துக்கொள்கின்றனர். சமீபத்தில் எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியை, எஸ்.எம்.எஸ் அனுப்புவதை தடைசெய்து ஒடுக்கியதே இதற்கு உதாரணம்”

இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்ற வகையில் உங்களுக்கு வருவாய் வருகிறதா?

“நான் இ-மெயிலுக்கு ‘காப்பி ரைட்ஸ்’தான் வாங்கினேன். ‘பேடன்ட் ரைட்ஸ்’ அல்ல. காப்பிரைட்ஸ் படி, ராயல்டி தொகை வராது. 1995-ம் ஆண்டுதான் சாஃப்ட்வேருக்கு பேடன்ட் ரைட்ஸ் வாங்கும் சட்டம் வந்தது. அதன்பிறகு நான் முயற்சிக்கவில்லை. ஏனெனில் நான் பணத்தை எதிர்பார்க்கவில்லை. என் நிறுவனங்கள் வழியே ஏராளமான பணம் எனக்குக் கிடைக்கிறது”

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

“எனது முழு வாழ்க்கையும் அறிவியலில்தான் செலவாகும், அதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவிலும், இந்தியாவிலுமாக மாறி, மாறி இயங்கவே விரும்புகிறேன். இந்திய சித்த மருத்துவத்தின் மேன்மைகளை ஆராய்ச்சி செய்து, அதை கிழக்குலகின் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவ துறையில் புதிய புரட்சியை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு.

இன்றைய கார்பொரேட் உலகம், தொழில்நுட்பங்களையும், அறிவியலையும், அறிவையும் மேலும் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. அது எல்லோருக்கும் கைவராத கலை என்பதை போல சித்தரிக்கிறது. ஆனால் உலகத்தில் ஒரே ஒரு சிவா மட்டுமில்லை.. ஒரே ஒரு சாம்ஸ்கி மட்டுமில்லை… உலகம் முழுக்க ஆயிரமாயிரம் சிவாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியே கொண்டு வர வேண்டும்!’’

நன்றி: மனித குலத்தின் ஒரே தொடர்பு ஊடகமாக பரிணமித்துள்ள இ-மெயிலை கண்டுபிடித்தவர் யார்? அவர் ஒரு தமிழன். பெயர் சிவா அய்யாதுரை. ராஜபாளையத்துக்காரர். வசிப்பது அமெரிக்காவில்.

டைம் பத்திரிகை இவரை ‘டாக்டர் இ-மெயில்’ என்று அழைக்கிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் என அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் ‘இ-மெயிலை கண்டுபித்தவர்’ என இவரை கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும், பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, ‘டாக்டர் சிவாதான் இமெயிலை கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடம் எல்லாம் பேசுகிறார். உலகின் மிக முக்கியமானதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (smithsonian museum), “மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இ-மெயிலையும் மதிப்பிட வேண்டும்” என்று வர்ணிக்கிறது.

Shiva-Ayyadurai-Photo-Shot

அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி. (Massachusetts Institute of Technology)  பல்கலைக்கழகத்தில் Systems Visualization   மற்றும் Comparative Media Studies  ஆகிய இரு துறைகளில் பேராசியராக இருக்கும் சிவா அய்யாதுரை, அதே பல்கலைக்கழகத்தில் நான்கு பட்டங்களும் ஒரு பி.ஹெச்.டி. பட்டமும் பெற்றவர். நோம் சாம்ஸ்கி தலைமையில், இந்தியாவின் சாதிய அடுக்குநிலை தொடர்பாக ஆய்வு செய்தவர். நஷ்டத்தில் இயங்கி மூட வேண்டிய நிலையில் இருந்த அமெரிக்க தபால் துறையை லாபகரமாக மாற்றிக்காட்டியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் ஏழு நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருபவர். (அதில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ‘வெள்ளை மாளிகை’யும் உண்டு).

ஓர் அதிகாலை நேரத்தில் சிவா அய்யாதுரையுடன் நடத்திய நீண்ட ‘ஸ்கைப்’ உரையாடலில் இருந்து…

சொல்லுங்கள், நீங்கள் யார்? இத்தனை நாளும் எங்கிருந்தீர்கள்?

“இங்குதான் இருந்தேன். எப்போதும் போல என் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்! என் அப்பா அய்யாதுரைக்கு சொந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் என்ற கிராமம். அம்மா மீனாட்சிக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. அப்பா, அம்மா இருவரும் அந்தக் காலத்திலேயே நன்றாக படித்தவர்கள். அம்மா, அப்போதே எம்.எஸ்.சி. கணிதம் படித்து மாநில அளவில் பதக்கம் வென்றவர். எனக்கு விவரம் தெரிவதற்கு முன்பே குடும்பம் மும்பைக்கு இடம்பெயர்ந்து விட்டது. அங்கு செம்பூர் என்ற இடத்தில் குடியிருந்தோம். அப்பா, யூனிலீவர் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தார். அம்மா, டான்பாஸ்கோ பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றினார். 5, 6 வயதிலேயே எனக்கு படிப்பின் மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. என்னை மேற்கொண்டும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக எங்கள் குடும்பம் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தது. சரியாக நீங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் இதே டிசம்பர் 2-ம் தேதி, எனது ஏழாவது பிறந்தநாள் அன்று நாங்கள் மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு பறந்தோம்.

நியூஜெர்ஸியில் வீடு. நூவர்க் (Newark) என்ற சிறிய பகுதியில் இருந்த லிவிங்ஸ்டன் பள்ளியில் படித்தேன். 1978-ம் ஆண்டு, எனக்கு 14 வயது இருக்கும்போது நியூயார்க் பல்கலைக்கழகம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 40 மாணவர்களை தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளை கற்றுக்கொடுத்தது. இந்தியாவில் கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதை போல… அது ஒரு சம்மர் கிளாஸ். அதில் ­FORTRAN IV என்ற புரோகிராமிங் மொழியை கற்றுக்கொண்டேன். அந்த பயிற்சியில் பங்கெடுத்த ஒரே இந்திய மாணவன் நான்தான். ஆனாலும் எனக்கு பள்ளிப்படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வந்தது.

நான் பள்ளியை விட்டு நிற்கப் போவதாக அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா, ‘யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் டென்டிஸ்ரி’யில் (University of Medicine and Dentistry of New Jersey) டேட்டா சிஸ்டம் அனலிஸ்ட்-ஆக பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் தன்னுடன் பணிபுரிந்த, லெஸ் மைக்கேல்சன் (Les Michelson) என்ற பேராசிரியரிடம் என்னை அழைத்துச் சென்றார். மைக்கேல்சன், அப்போது அந்த மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளை, கம்ப்யூட்டர் வழியாக ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் என்னை தன் ஆராய்ச்சி உதவியாளர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டார். நான் பள்ளிக்கூடம் சென்றதுபோக மீதமிருந்த நேரத்தை எல்லாம் மைக்கேல்சனின் ஆராய்ச்சிக் கூடத்திலேயே செலவழித்தேன். இரவு, பகலாக அங்கேயே கிடந்தேன். சவால் நிறைந்த அந்த பணி என் மனதுக்குப் பிடித்திருந்தது.

அப்போது அந்த மருத்துவமனையில் மூன்று கட்டடத் தொகுதிகள் இருந்தன. ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக ‘மெமோரண்டம்’ எழுதுவார்கள். நோயாளி பற்றிய விவரம், மருத்துவர் பற்றிய விவரம், to, from, subject எல்லாம் எழுதப்பட்ட அந்த மெமோரண்டத்தை அங்கிருக்கும் தபால்பெட்டி மூலம் பரிமாறிக்கொள்வார்கள். இதை அப்படியே எலெக்ட்ரானிக் மயப்படுத்த வேண்டும். அந்த மெமோரண்டத்தை மருத்துவமனையில் உள்ள எந்த ஒரு கம்ப்யூட்டரில் இருந்தும், மற்றொரு கம்ப்யூட்டருக்கு எலெக்ட்ரானிக் வடிவத்தில் அனுப்ப முடிய வேண்டும். இதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. இந்த ஆராய்ச்சியில் நான் உருவாக்கியதுதான் இ-மெயில் சிஸ்டம். ­

FORTRAN IV மொழியில் 50 ஆயிரம் வரிகள் கொண்ட அந்த புரோகிராமை எழுதியபோது எனக்கு வயது 14. அது 1978-ம் ஆண்டு. அதற்கு email  என்று பெயரிட்டேன். electro mail என்பதன் சுருக்கம் அது. FORTRAN  மொழியில் ஒரு புரோகிராமில் அதிகப்பட்சம் 5 எழுத்துருக்கள்தான் பயன்படுத்த முடியும் என்பதாலும், email  என்ற சொல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததாலும் அந்த பெயரை வைத்தேன். அகராதியில் அதற்கு முன்பு email   என்ற வார்த்தையே கிடையாது.

1981-ம் ஆண்டு எனது கண்டுபிடிப்புக்காக, ‘வெஸ்டிங்ஹவுஸ் சயின்ஸ் டேலன்ட்’ (Westinghouse Science Talent) விருதுக்காக விண்ணப்பித்தபோது, ‘தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடித்த சமயத்தில் அது உலகத்தை ஆளப்போகிறது என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் இந்தக் கண்டுபிடிப்பும் அப்படி ஆகலாம்’ என்று குறிப்பு எழுதினேன். இன்று அதுதான் நடந்திருக்கிறது!”

அதன்பிறகு நீங்கள்தான் இ-மெயிலை கண்டுபிடித்தீர்கள் என்று ஏன் உரிமை கோரவில்லை?

“அப்படி யார் சொன்னது? இ-மெயிலுக்கான ‘காப்பி ரைட்ஸ்’ இன்றும் என்னிடம்தான் இருக்கிறது. நான் 1981, செப்டம்பர் மாதம் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்துக்கு வந்தேன். 1982 ஆகஸ்ட் 30-ம் தேதி இ-மெயிலுக்கான முதல் காப்புரிமையை அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றேன். அப்போது இண்டர்நெட் என்பது வரவில்லை. ஆகவே இ-மெயில் என்பது நிறுவனங்கள் நிர்வாக ரீதியாக பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாக இருந்தது. 1989-ல்தான் இண்டர்நெட் வழியே இ-மெயில் அனுப்பும் சோதனை முயற்சிகள் தொடங்கின. 96-ம் ஆண்டு ஹாட்மெயில் மிகப் பிரபலமாக காரணம், அப்போது உலகம் முழுவதும் இண்டர்நெட் அதிவேகமாக பரவிக்கொண்டிருந்தது. அதன்பிறகு 97-ல் யாஹூ வந்தது. 99-ல் செல்போன் வழியே இ-மெயில் அனுப்பும் வசதியை பிளாக்பெர்ரி துவங்கியது. நான்கு வருட ‘பீட்டா’ பரிசோதனைக்குப் பிறகு 2007-ல் ஜி-மெயில் வந்தது!”

ஆனால், டேவிட் கிராக்கர் (David Crocker), ராய் டாமில்சன் (Ray Tomlinson) ஆகியோரின் பெயர்களும் இ-மெயில் கண்டுபிடித்தவர்கள் பற்றிய ஆய்வுகளில் பேசப்படுகின்றன…

“அது பழையகாலம். நான்தான் இ-மெயிலை கண்டுபித்தேன் என்பதை ஸ்மித்சோனியம் ஆவணக் காப்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு இந்த சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 1978-ம் ஆண்டு உலகின் முதல் இ-மெயிலை எனது வழிகாட்டியான பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனுக்கு அனுப்பினேன். அது ஒரு டெஸ்ட் மெயில். அதன் ஒரிஜினல் புரோகிராமிங் கோடு, இப்போது ஸ்மித்சோனியம் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. பேராசிரியர் நோம் சாம்ஸ்கி என் ஆய்வுகளின் நேரடி சாட்சியாக இருக்கிறார். அவர் எனது கண்டுபிடிப்பை பற்றி பல இடங்களில், பேசியும் எழுதியும் வருகிறார். புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகை, தனது தொழில்நுட்பப் பிரிவின் பதிப்பில் எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்து என்னுடைய நீண்ட பேட்டி ஒன்றையும் வெளியிட்டது.

டேவிட் கிராக்கர் கண்டுபிடித்தது ‘டெக்ஸ்ட் மெசேஜ்’ (text message) அனுப்பும் தொழில்நுட்பத்தைதான். புரியும்படி சொல்வதானால், இப்போது ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா… அதைபோல அவர் வெறுமனே டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக்கொள்வதை கண்டறிந்தார். அதை இ-மெயில் என்று சொல்ல முடியாது. அப்படியானால் நாம் தந்தி அனுப்புவதைதான் இ-மெயில் என்று அழைக்க வேண்டியிருக்கும். கார் ஓடுவதற்கான நான்கு சக்கரங்களை கண்டுபிடித்துவிட்டு ‘நான் கார் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று சொல்வதை போலதான் இதுவும். மாறாக, இ-மெயில் என்பது ஒரு முழுமையான சிஸ்டம். இன்று நாம் பயன்படுத்தும் Inbox, Outbox, Drafts, To, From, Date, Subject:, Body, Cc, Bcc, Attachments, Folders, Compose, Forward, Reply, Address Book, Groups, Return Receipt, Sorting   உள்ளிட்ட 86 வகையான இ-மெயில் புரோகிராமிங்கை எழுதி, வடிவமைத்தது நான்தான். இதுதான் முழுமையான இ-மெயில் சிஸ்டம். ராய் டாமில்சனை பொருத்தவரை அவர் இ-மெயிலில் இன்று பயன்படுத்தும் @  குறியீட்டை கண்டுபிடித்தார். அதற்கு மேல் அவரது பங்களிப்பு இதில் எதுவும் இல்லை!”

இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள்?

“1993-ம் ஆண்டு நான் பி.ஹெச்.டி. ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தார். அப்போது வெள்ளை மாளிகைக்கு நாள் ஒன்றுக்கு 5,000 இ-மெயில்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றை நிர்வகிக்க நூற்றுக்கணக்கானவர்கள் வேலைக்கு இருந்தாலும், அது நாளுக்கு நாள் சிக்கலானதாக மாறிக்கொண்டிருந்தது. ஆகவே, அந்த மெயில்களை வகை வாரியாக பகுத்து பிரிக்கும் தானியங்கி தொழில்நுட்பத்தை கண்டறிவதற்கான போட்டி ஒன்றை அறிவித்தது வெள்ளை மாளிகை. பல்வேறு நிறுவனங்களும், தனிநபர்களுமாக 147 பேர் அதில் கலந்துகொண்டனர். இறுதியில் நான் கண்டறிந்த தொழில்நுட்பம் வெற்றிபெற்றது. அதற்கு நான் ‘எக்கோமெயில்’ (EchoMail) என்று பெயரிட்டேன். இப்போதும் வெள்ளை மாளிகையில் இந்த தொழில்நுட்பம்தான் நடைமுறையில் இருக்கிறது.

பிறகு இந்த ‘எக்கோமெயிலை’ ஒரு நிறுவனமாக தொடங்கினேன். இன்று உலகின் மிக முக்கியமான நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்கள். இந்த நிறுவனத்தின் மதிப்பு 200 மில்லியன் டாலர். இதுபோக, வேறு மூன்று நிறுவனங்களையும் நடத்துகிறேன். கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் நஷ்டத்தில் இயங்கிய அமெரிக்க தபால் துறையை எனது புதிய இ-மெயிலிங் சிஸ்டம் மூலம் லாபகரமாக மாற்றியபோது, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பில் இருந்து தப்பினார்கள். அமெரிக்க ஊடகங்கள் என்னைப்பற்றி பெரிதாக எழுதினார்கள். ஆனால் எனக்கு இந்தியாவில் பணிபுரியவே விருப்பம். ஆனால் அங்கு எனக்கு ஒரு கசப்பான அனுபவம் இருக்கிறது.”

என்ன நடந்தது இந்தியாவில்? நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாக இணையப் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது…

“ஆம், உண்மைதான். 2007-ம் ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான CSIR-Council of Scientific and Industrial Research துறையில் என்னை கூடுதல் செயலாளராக நியமித்தார் மன்மோகன்சிங். மூன்று ஆண்டுகள் அங்கு இருந்தேன். அந்த சி.எஸ்.ஐ.ஆர். நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. கடந்த 60 ஆண்டுகளில் அதில் உள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்கும் லஞ்சம், ஊழல். அறிவியல் கண்டுபிடிப்புக்கான சூழல் கொஞ்சமும் இல்லை. இதைப்பற்றி ‘கண்டுபிடிப்புகளுக்கு சுதந்திரம் வேண்டும்’ (Innovation demands freedom) என்ற தலைப்பில் 47 பக்கத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதை உலகின் முக்கியமான 4 ஆயிரம் விஞ்ஞானிகளுக்கு மெயில் அனுப்பினேன். உலக அளவில் அது விவாதம் ஆனது.

உடனே இந்தியாவின் சட்டத்தை நான் மீறிவிட்டதாகச் சொல்லி திடீரென ஒருநாள் என் வீடு முடக்கப்பட்டது. என்னை வெளியேற்றினார்கள். நான் நேபாளம், கத்தார் வழியே அமெரிக்கா வந்தேன். ‘சிவா அய்யாதுரையை வெளியேற்றியது இந்தியா செய்த பெரிய தவறு’ என்று பல விஞ்ஞானிகள் எழுதினார்கள். அதைப்பற்றி இந்தியா கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இப்போதும் அங்கு சூழல் மாறிவிடவில்லை. அங்கிருக்கும் நேர்மையற்ற அரசியல் சூழலில் அறிவியல் ஒருபோதும் வளராது

இ-மெயிலை கண்டுபிடித்தது நீங்கள்தான் என்பதை அவ்வளவு சுலபத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?

“ஏனெனில் நான் கறுப்பு நிறத் தோல் உடையவன். புலம்பெயர்ந்து வந்த இந்தியன். சிறுபான்மை தமிழன். ‘நூவர்க்’ என்னும் சிறிய ஊரில் வசித்தவன். முக்கியமாக 14 வயது சிறுவன். இவற்றை தவிர வேறு என்ன காரணத்தை சொல்ல முடியும்? 50 ஆயிரம் வரிகளை கொண்ட ஒரிஜினல் புரோகிராமிங் கோட், ஒரு வெள்ளைத்தோல் உடையவரிடம் இருந்தால் இந்த சர்ச்சைகளுக்கு வாய்ப்பே இல்லை.

அறிவியல் கண்டுபிடிப்புகளை ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், எம்.ஐ.டி. போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களிலும்தான் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் நான் எம்.ஐ.டி-யில் இருந்தபோது கண்டுபித்த ‘எக்கோமெயிலை’ கொண்டாடும் இவர்கள், நியூஜெர்ஸி மருத்துவமனையில் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தபோது கண்டுபிடித்த இ-மெயிலை புறக்கணிக்கிறார்கள். இந்தியாவில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் பாகுபாடு இருப்பதை போல, அமெரிக்காவில் தோலின் நிறத்திலும், சிறுபான்மை-பெரும்பான்மை என்ற அளவிலும் பாகுபாடு இருக்கிறது. தெளிவாக எழுதிக்கொள்ளுங்கள், தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்த கறுப்பு நிறத் தோல் உடைய 14 வயது தமிழ் சிறுவன் இ-மெயிலை கண்டுபிடித்தான்.

இன்னொரு முக்கியமான கோணத்திலும் இதை நீங்கள் பார்க்க வேண்டும். நான் அடிக்கடி பயன்படுத்தும் ‘மோட்டோ’ வாக்கியம், ‘கண்டுபிடிப்பு என்பதை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் செய்ய முடியும்’ (Innovation Any Time, Any Place by Anybody). அறிவும், அறிவியலும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அறிவியல் கண்டுபிடிப்புகளை வெறுமனே பணம் ஈட்டும் சந்தையாக பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்னை தனிமைப்படுத்த விரும்புகின்றன. ஆனால் நான் இப்போதும் சொல்கிறேன், என்னிடம் பேட்டி எடுக்கும் நீங்களும், இதை படிக்கப்போகும் தமிழ் வாசகர்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். அதற்கான சூழலை உருவாக்கித் தர வேண்டும். வரப்போகும் காலம் மிக அபாயகரமானது. வேலை இல்லாத் திண்டாட்டம் மிக மோசமாக இருக்கும். மில்லியன் கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது அறிவியலால் மட்டும்தான் சாத்தியமாகும்!”

உங்கள் பேச்சை வைத்து கேட்கிறேன்… நீங்கள் சயிண்டிஸ்டா, கம்யூனிஸ்டா?

நான் சயின்டிஸ்ட் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்டும் கூட. எம்.ஐ.டி.யில் படிக்கும்போது மாணவர் சங்கத்தில் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். தென் ஆப்பிரிக்காவில் நடந்த‌ நிறவெறி நடவடிக்கைகளைக் கண்டித்து அந்த நாட்டு கொடியை எரித்தேன். பல்கலைக்கழகத்தின் உணவு உபசரிப்புப் பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதை கண்டித்து போராடி வெற்றி பெற்றோம். இலங்கையில் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அப்போது அதிபராக இருந்த பிரேமதாசா அமெரிக்கா வந்தார். அவரை வெளியேறச் சொல்லி போராடினோம். ‘த ஸ்டூடண்ட்’ என்ற பெயரில் நான்கு ஆண்டுகள் பத்திரிகை நடத்தினேன். கல்லூரி வளாகத்தில் நானும், என் சகாக்களும் வலிமை வாய்ந்த சிறுபான்மை சக்திகளாக இருந்தோம். பி.ஹெச்.டி. செய்துகொண்டிருந்தபோது, ஈராக் நாட்டுக்குள் படைகளை அனுப்பிய அமெரிக்க அரசுக்கு எதிராக தன்னந்தனியாக போராடினேன். அதனால் நான் அடிப்படையில் கம்யூனிஸ்ட். பிறகுதான் சயின்டிஸ்ட்.

இன்று தொழில்நுட்பத்தையும், அறிவியல் வளர்ச்சியையும் பெரும் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற இணைய நிறுவனங்களும், செல்போன் கம்பெனிகளும் மக்களை அன்றாடம் கண்காணிக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது மக்களுக்கு எதிராக கை கோத்துக்கொள்கின்றனர். சமீபத்தில் எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியை, எஸ்.எம்.எஸ் அனுப்புவதை தடைசெய்து ஒடுக்கியதே இதற்கு உதாரணம்

இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்ற வகையில் உங்களுக்கு வருவாய் வருகிறதா?

“நான் இ-மெயிலுக்கு ‘காப்பி ரைட்ஸ்’தான் வாங்கினேன். ‘பேடன்ட் ரைட்ஸ்’ அல்ல. காப்பிரைட்ஸ் படி, ராயல்டி தொகை வராது. 1995-ம் ஆண்டுதான் சாஃப்ட்வேருக்கு பேடன்ட் ரைட்ஸ் வாங்கும் சட்டம் வந்தது. அதன்பிறகு நான் முயற்சிக்கவில்லை. ஏனெனில் நான் பணத்தை எதிர்பார்க்கவில்லை. என் நிறுவனங்கள் வழியே ஏராளமான பணம் எனக்குக் கிடைக்கிறது”

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

“எனது முழு வாழ்க்கையும் அறிவியலில்தான் செலவாகும், அதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவிலும், இந்தியாவிலுமாக மாறி, மாறி இயங்கவே விரும்புகிறேன். இந்திய சித்த மருத்துவத்தின் மேன்மைகளை ஆராய்ச்சி செய்து, அதை கிழக்குலகின் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவ துறையில் புதிய புரட்சியை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு.

இன்றைய கார்பொரேட் உலகம், தொழில்நுட்பங்களையும், அறிவியலையும், அறிவையும் மேலும் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. அது எல்லோருக்கும் கைவராத கலை என்பதை போல சித்தரிக்கிறது. ஆனால் உலகத்தில் ஒரே ஒரு சிவா மட்டுமில்லை.. ஒரே ஒரு சாம்ஸ்கி மட்டுமில்லை… உலகம் முழுக்க ஆயிரமாயிரம் சிவாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியே கொண்டு வர வேண்டும்!’’

நன்றி: ஆனந்த விகடன்

கமல் ஹாசனுடன் இணையும் இமெயில் தமிழர்: சிவா அய்யாதுரை நேர்காணல் - தி இந்து

 இமெயிலைக் கண்டுபிடித்தவர் ஒரு இந்தியர், ஒரு தமிழர். ராஜபாளையத்தில் முகவூரைச் சொந்த ஊராகக் கொண்ட சிவா அய்யாதுரை மும்பையில் ஏழு வயது வரை வசித்தார். அதன் பிறகு தனது பெற்றோர்களுடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். 1978-ல் தனது 14-வது வயதில் இமெயிலைக் கண்டுபிடித்தார்.

இமெயிலைக் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையைப் பெற்று 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசால் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவுள்ளது. ஆகஸ்ட் 30-ம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் டிஜிட்டல் இந்தியா நிகழ்ச்சியில் அவர் கவுரவிக்கப்படுகிறார். சமீபத்தில் அவர் நடிகர் கமல் ஹாசனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அது குறித்து அவர் அளித்த பேட்டி:

கமலோடு என்ன பேசினீர்கள்?

கமல் ஹாசன் எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் சந்திக்கும்போது பல விஷயங்களை ஆழமாக விவாதிப்போம். சமீபத்தில் சந்தித்தோம். இந்த உலகில் எப்படிப் பொய்யை உண்மையாகவும், உண்மையைப் பொய்யாகவும் மாற்ற முடிகிறது என்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.

அதைத் தவிர, வரலாறு, மருத்துவம், கலை எனப் பல விஷயங்களைப் பேசினோம். நாங்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய முயற்சியில் ஈடுபடவுள்ளோம். அது கண்டிப்பாக லாப நோக்கு கொண்ட முயற்சியாக இருக்காது.

நீங்கள்தான் மின்னஞ்சலை கண்டுபிடித்தீர்களா?

நான் இமெயிலை கண்டுபிடித்தது தற்செயலானதுதான். எனக்குக் கணிதத்தின் மீது அதீத ஆர்வம் உண்டு. ஒன்பதாம் வகுப்பிலேயே கல்லூரிப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது என் அம்மா, எனது குரு மைக்கெல்சனிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது எனது கவனம் எல்லாம் மருத்துவத் துறையில்தான் இருந்தது. எனது குருவான மைக்கெல்சென் எனக்கு மருத்துவம் சார்ந்து ஏதாவது பணி கொடுப்பார் என்றுதான் காத்திருந்தேன். ஆனால், எனக்கு அவர் இமெயில் உருவாக்கும் பணியை அளித்தார்.

அலுவலகங்களில் கடிதப் போக்குவரத்தைக் கணினிமயமாக்க வேண்டும் என்பதுதான் 1970-களில் எனக்குக் கொடுக்கப்பட்ட சவால். இன்று உங்கள் மெயிலில் இருக்கும் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஷ் உள்ளிட்டவை அப்போது காகிதங்களாக இருக்கும். அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டியது அங்குள்ள உதவியாளரின் பொறுப்பாகும். அந்தப் பணிகளை எளிமைப்படுத்துவதற்காகவே இமெயில் உருவாக்கினேன்.

எனக்கு அப்போது 14 வயது. இமெயிலுக்கான காப்புரிமை பெற்றிருந்தாலும் அதை நான்தான் கண்டுபிடித்தேன் என்று நான் கூறிக்கொள்ளவில்லை. அதன் பிறகு நான் எனது மருத்துவ ஆராய்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். 2011-ம் ஆண்டில் எனது நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் டைம் பத்திரிகையின் நிருபர் எனது ஆவணங்களைச் சரிபார்த்து ‘இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ என்று கட்டுரை எழுதினார். அதற்குள் இமெயிலை நாங்கள்தான் கண்டுபிடித்தோம் என்று சில ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் பெருமை தேடிக்கொள்ள ஆரம்பித்தன.

ஏன் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை?

உலகெங்கும் பயன்படுத்தப்படும் இமெயிலை ஒரு இந்தியன், கருப்பு நிறத் தமிழன் கண்டுபிடித்தான் என்று அவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இந்தியர்களும் அதை எளிதாக நம்புவதில்லை. புதிய கண்டுபிடிப்புகள் மேலை நாட்டுக்காரர்களால்தான் கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணத்தை நம்மிடமேகூட அவர்கள் விதைத்துள்ளனர். இந்தியர்கள் புதிதாக எதையும் செய்ய முடியாதவர்கள் என்ற எண்ணத்தை இந்தியர்களின் எண்ணங்களிலும் விதைத்துள்ளனர். இது நவீன காலனியாதிக்கம்.

மருத்துவத்தில் உங்களின் சாதனை என்ன?

எனக்கு மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணம் எனது பாட்டிதான். அவர் நோயாளியின் முகத்தைப் பார்த்தே மருந்தைக் கொடுப்பார். நான் சிறுவயதிலேயே எனது பாட்டி வைத்தியத்தின் மந்திரத்தை அறிந்து அதை உலகுக்குக் கொடுப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். அதை நோக்கித்தான் இப்போதும் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.

நமது நாட்டில் உள்ள சித்த வைத்தியம் உடலை ஒரு கட்டுப்பாட்டு இயந்திரமாகப் பார்க்கிறது. ஒரு விமானத்தை விமானப் பொறியாளர் பார்ப்பதுபோல. இதனைப் பொறியியல் வார்த்தைகளில் ஆங்கில மொழியில் நான் கொடுத்தேன்.

எங்களது நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக, சைட்டோ சால்வ் என்ற கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளோம். அது அனைத்து ஆய்வக ஆராய்ச்சிகளையும் உள்ளடக்கிய புதிய ஆய்வுமுறை. இதன் மூலம் உடலின் இயக்கத்தையும் அதற்கு ஏற்ற மருந்துகளையும் கணினியின் மூலமே பொருத்திப் பார்க்க முடியும். கணையப் புற்றுநோய்க்கான அனைத்து மருந்துகளின் இயக்கத்தையும் ஆராய்ந்து, சரியான, அதிகப் பயன் கொடுக்கிற மருந்தைத் தேர்வு செய்துள்ளோம். அதனைச் சோதித்துப் பார்ப்பதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.

எக்கோ மெயில் என்று புதிதாக கண்டுபிடித்துள்ளீர்களா?

புகழ்மிக்க எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்வதற்கானவாய்ப்பு கிடைத்தபோது, அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் கிளிண்டன் அலுவலகத்தில் உள்ள மெயில்களை முறைப்படுத்துவதற்கு ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற பிறகு உருவாக்கப்பட்டது எக்கோ மெயில். இதன் மூலம் ஒருவருக்கு வரக்கூடிய மெயில்கள் தானாகவே ஒழுங்குபடுத்தப்படும். இந்த தொழில்நுட்பத்துக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வெற்றிகரமாக நடத்தினேன். அதன் பிறகு மீண்டும் மருத்துவ ஆராய்ச்சியில் இறங்கியுள்ளேன்.

சிவா அய்யாதுரை பேசும் போது பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்
அவர் பேசும் போது “நான் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. மீடியா பணிஎன்பது உயர்வான பணி.
நான் இங்கே அழுத்தமாகக் கூற விரும்புவது நமக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை உடைக்கவேண்டும்.
நம்மால் முடியாது என்கிற எண்ணத்தைப் போக்க வேண்டும்.

நம் மீது சில கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் மேலை நாட்டினர் குறிப்பாக ஆங்கிலேயர் வேண்டுமென்றே உருவாக்கி வைத்துள்ளார்கள். அதைநாம் உடைக்க வேண்டும்.

நான் 1978ல் ​​ஈமெயிலைக் கண்டு பிடித்தது ஒரு இந்தியனாக ​​கண்டு பிடித்தேன். ​​ஒரு தமிழனாகக் கண்டு பிடித்தேன். ​ ஒரு தமிழனாக ஈமெயிலைக் கண்டுபிடித்ததில் பெருமையடைகிறேன். ​ இதை இவ்வளவு காலம் கழித்து சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் ​அப்போது இதை பிரபகண்டா ​பண்ணும் அளவிற்கு என்னிடம் வக்கீலோ அல்லது உடனிருந்து வழி நடத்த யாரும் இல்லை. பதினான்கு வயது சிறுவன் என்ன செய்வான். காப்பி ரைட் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? ஆனால் இப்போது உரக்கச் சொல்லவேண்டிய நேரம் இது. நம்மிடம் உள்ள ஒவ்வொரு இந்தியக் குழந்தையும் ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் இதைக் கண்டு பிடித்தது ஒரு 14 வயது இந்தியப் பையன் ,தமிழ்ப் பையன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.14வயது இந்திய பையனால் முடியும் என்றால் எல்லா இந்தியராலும் முடியும்.

வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுக்கு வந்த போது முதலில் சுரண்டி பொருள்களைக் கொண்டு சென்றார்கள் அடுத்து நம்மை மூளைச் சலவை செய்தார்கள். இந்தியர்கள் எல்லாம் பணியாளர்கள், எழுத்தர்கள் அதிகமாகப் போனால் சிஇஓக்கள் வரை ஆகலாம்.​ ​அவ்வளவுதான்.
ஆனால் வெள்ளைக்காரர்கள்தான் படைப்பாளிகள்,​​ வெள்ளைக்காரர்கள்தான் கண்டு பிடிப்பாளர்கள். நம்மை அந்தப் பட்டியலில் ​​சேர்க்கவே மாட்டார்கள்​.​சேர்க்க​விட​வே மாட்டார்கள்​. ​ எனக்கும் அது நடந்தது. அவர்களில் ஒருவன்தான் இமெயிலைக் கண்டுபிடித்தான் என்று இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அதற்கான விளையாட்டுகளைச் செய்தார்கள். ​​ ​​வெள்ளைக்காரர்கள்தான் கண்டு பிடிப்பாளர்கள்​ என்ற ​ நம்பிக்கையை நம்மிடம் விதைத்தது அவர்களின் வெற்றி, அவர்களின் தந்திரம், நாம் இதை உடைத்து வெளிவராமல் நம்மால் எதையும் ​ நாம் தான் ​கண்டு பிடி​த்தேன் என்று சொல்ல முடியாது.​ ​எனக்கான ஆதாரங்கள் என் அம்மாவிடமிருந்து கிடைத்தபோது நான் கண்டுபிடித்ததை நிரூபித்தேன். நான் வெள்ளைக்காரனுக்கு நிரூபிக்கவில்லை. இந்தியனுக்கான அடையாளத்தை நிரூபித்துள்ளேன். இப்போது நாம் சொல்லலாம் இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு பதினான்கு வயதுச் சிறுவன், அதுவும் கருப்புத்தோல் கொண்ட தமிழன், இந்தியன் என்று!

​ இந்த​ ​வெள்ளை​த்​ தோல்​ ​கொண்டவந்தான் கண்டுபிடிப்பான் என்ற ​மூளைச் சலவையிலிருந்து ​இந்திய மக்கள் முதலில் வெளியே வர வேண்டும்.

ஏழு எட்டாம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் வந்து நம்மைக் கேள்வி கேட்டது. அப்போது சொர்க்கத்தில்​ ஏற்ற தாழ்வு உண்டா என்ற கேள்விக்கு பதில் ஏற்ற தாழ்வு இல்லை என்றனர். அப்போ பூமியில் மட்டும் ஏன் ஏற்ற தாழ்வு என்று ஆன்மீகப் பெரியவர்களே கேள்வி எழுப்பியுள்ளனர்.​ ​ நம்மில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கியது வெள்ளைக்காரன்தான்​. சாதிப்பிரிவுகளைக் கொண்டு வந்து நம்மை பிரித்தாண்டது அவன்தான்​. எனக்கு இந்தியாவின் ஜாதி அமைப்பு மீது பல கேள்விகள் வருத்தங்கள் இன்றும் உண்டு. ஆனால் இதை நம்மிடம் மீண்டும் திணித்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான். அப்போது ஜாதிமாறி திருமணங்கள் இருந்தது. 13ஆம் நூற்றாண்டில் 14ஆம் நூற்றாண்டில்,15ஆம் நூற்றாண்டில் ஜாதிக் கலப்பு திருமணங்கள் சகஜமாகி வந்தன.. ஆனால் அந்த ஜாதிமுறையை மீண்டும் ஆங்கிலேயர்கள்தான் கொண்டு வந்து நம்மைப் பிரித்தார்கள்.​ ​

நான் கேட்கிறேன் ஆங்கிலேயரால் கண்டுபிடிப்புகள் முடிகிறது என்றால் நம்மால் ஏன் முடியாது?

5000 ஆண்டுகளுக்குமுன் பல வற்றைக் கண்டுபிடித்த நம்மால் ஏன் இப்போது முடியவில்லை.

எனக்குப் பூர்வீகம் ராஜபாளையம், மும்பையில் வளர்ந்தேன். சிறுவயதிலேயே ஏழு வயதில் அமெரிக்கா போனேன். போன இடம் அங்கே ஏழைகளின் நகரமான பேட்டர்சன். பலரும் நினைப்பது போல அமெரிக்காவில் எல்லாருக்கும் எல்லாம் உண்டு என்பது மாயை. அங்கும் ஏழைகளின் ஊர் , பணக்காரர்களின் ஊர் வெள்ளையர்களின் ஊர் , கறுப்பர்களின் ஊர் என்று பாகுபாடுகள், பிரிவினைகள் உண்டு.

நாங்கள் பேட்டர்சன் நகரத்திலிருந்து படிப்படியாக வசதியான லிவிங்ஸ்டன் -நியூஜெர்ஸி நகரத்துக்குச் சென்றோம். எனக்கு இது புதிராக இருந்தது. ஆனாலும் . படிப்பில் கணிதத்தில் மருத்துவத்தில் எனக்கு மிகவும் ஆர்வம்​.​ கல்லூரிக்கான பாடத்திட்டத்தை 9 வயதில் முடித்தேன்.​ அதற்குமேல் படிப்பதற்கு இல்லை. எனவே 1978ல் நியூயார்க் பல்கலைக் கழகம் அமெரிக்காவில் 40 மாணவர்களைத் தேர்வு செய்து மென் பொருள் பயிற்சி கொடுத்தது. அதில் தேர்வான ஒரே இந்தியன் நான்தான்.

அப்போதே 7 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்திருந்தேன். மேலும் 6 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்தேன்​​.​ ​ நியூ​யெர்க் என்கிற ஊரில் 3 மருத்துவக்கல்லூரி நடத்திய மைக்கேல்சன் என்பவர் எனக்கு ஒரு வேலை கொடுத்தார். அங்கு நான் போனபோது14 வயதுதான். வேலைபார்த்தவர்கள் 30 வயது 40 வயதுகொண்டவர்கள். ஆனால் மைக்கேல்சன் எனக்கு அவர்களுக்குச் சமமான மரியாதை கொடுத்தார். சம்பளமும்கொடுத்தார். இது முழுக்க முழுக்க என் தகுதிபார்த்து கொடுத்தது.

அப்போதே 14,15 செமினார் கூட நடத்தினேன்.

எனக்கு ஒரு சவாலான வேலை கொடுத்தார். அங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் கணினிகளை இணைப்பது சிரமமாக இருந்தது. நிறைய மனித உழைப்பைச் சாப்பிட்டது. சிக்கலாகவும் சிரமாகவும் இருந்தது. இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கவும், 30 அலுவலகங்களை இணைத்து 3 கல்லூரிகளை​ ​இணைப்பது எப்படி எனக் கண்டுபிடிக்கவும் சொன்னார்.​ ​

அப்படி கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஈமெயில். அப்போது அப்பர் கேஸில் 5 கேரக்டர்கள் மட்டுமே வர முடியும். எனவேதான் Email என்று பெயர் வைத்தேன். இதுதான் ஈமெயில்​ ​கண்டு பிடிக்கப்பட்ட வரலாறு.

இதுமாதிரி புதுமாதிரி கண்டு பிடிப்புகள் எல்லாம் ஆங்கிலேயருக்கு மட்டுமே உரிமையானது. தகுதியுள்ளது. என்பது அவர்கள் நினைப்பு. எனவே எனக்கு எதிராக ‘ரேட்டியான்’ என்கிற கும்பல் மோசடிகள்,. போர்ஜரியில் ஈடுபட்டு என்னை வம்புக்கு இழுத்தார்கள். நான் அவர்களுடன் மோதி வெற்றி பெற்றேன். ஈமெயில் என்றால் அது சிவா அய்யாதுரைதான் என்று வெற்றி பெற்றேன்.

அதுவரை ‘ஈமெயில்’ என்கிற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் இல்லை. 1978க்குப் பிறகுதான் எல்லா டிக்ஷனரியிலும் வந்தது.

இசை, எழுத்து, படைப்புகளுக்கு மட்டுமே அதுவரை காப்புரிமை இருந்தது. என்னை முன்னிட்டு மென்பொருள் சார்ந்த சட்டத்திருத்தம் 1980ல் அங்கு வந்தது.
இப்போது தினமும் ஈமெயில் போக்குவரத்துகள் 20 ஆயிரம் கோடி முறை நடக்கின்றன.. 4.2பில்லியன் ஈமெயில் முகவரிகள் உள்ளன. இது ஒரு இந்தியனின் தமிழனின் கண்டுபிடிப்பின் ,பங்களிப்பின் விளைவு அல்லவா?

1993ல் அதிபர் கிளிண்டன் கூட ஈமெயில் சார்ந்த வேலைப்பளுவைக் குறைக்க என்னிடம் யோசனை கேட்டிருக்கிறார்.எனக்கு கணினி சார்ந்து மட்டுமல்ல மருத்துவத்திலும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு.

நம்நாட்டு சித்தா, ஆயுர் வேதத்தின் அருமை தெரியாமல் இருக்கிறோம். என் பாட்டி படிக்காதவர்தான் ஒருவரைப் பார்த்தே என்ன உடல் பிரச்சினை என்று கண்டு பிடித்து வைத்தியம் செய்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நம் சித்தா, ஆயுர் வேதத்தின் சிறப்பு முழு உடம்புக்குமானது.

மேலை நாட்டு வைத்தியமுறையிலோ உட ம்பைப் பாகம் பாகமாக பிரித்துப் பார்ப்பார்கள் ஆயிரம் பாகங்கள், ஆயிரம்மருந்துகள், ஆயிரம்டாலர்கள் என்பது அவர்கள் கணக்கு எதையும் வியாபாரமாகப் பார்ப்பார்கள்

சைட்டோ சால்வ்’ என்பது எனது மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்பாகும். இதன்படி மனித உடலை கணினியில் உள்ளீடு செய்து தீர்வு காணலாம்.

நம் நாட்டு பாட்டி வைத்தியம் எளிமையானது நம் வீட்டு கறி மசாலாவில் மிளகு,மஞ்சள், சீரகம் இருப்பது சிறப்பு. நம் உடலில் பத்து டிரில்லியன் செல்கள் உள்ளன.எல்லாவற்றையும் சமன் செய்வதுதான் நம் மருத்துவம்.

சித்தாவின் பெருமைகளை உலகுக்கு காட்டும் முயற்சியில் மென்பொருள் செய்து வருகிறேன் .சாதாரண முருங்கைக்காய் 97% பாங்கிரியாடிக் கேன்சர் செல்களைக் கொல்லும்.

நான் அமெரிக்காவில் இருந்தாலும் வீட்டில் தமிழ் பேச வேண்டும் என்பது அப்பா, அம்மாவின் கட்டளை. எனவே தமிழை மறக்கவில்லை.

உலகமே கொண்டாடும் சிவா அய்யாதுரை, பற்றிய விவரங்கள்
Shiva Ayyadurai
Scientist
VA Shiva Ayyadurai is an American scientist of Indian origin, inventor and entrepreneur. As a high school student in 1979, he developed an electronic version of an interoffice mail system, which he called "EMAIL" and copyrighted in 1982. Wikipedia
Born: December 2, 1963 (age 51), Mumbai
Spouse: Fran Drescher (m. 2014)
Education: Massachusetts Institute of Technology
Marriage location: Malibu, California, United States
Fields: Systems biology, Computer Science, Scientific visualization, Traditional medicine

மனித மூளை ஆய்வுகூடத்தில் வளர்ப்பு
பேய்கள் பற்றிய பல உண்மைகள் - நாங்கள் அறிந்தவை! நிங்கள் அறிந்திட!
ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதான பல் ஒன்று கண்டுபிடிப்பு
வாகனங்கள் காற்றில் ஓடும் வகையில் இன்ஜினை தரங்கம்பாடி ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடிப்பு

No comments:

Post a Comment